1.0 எண்குணத்தான்
கோளில்
பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத்
தலை – திருக்குறள் – 9
தச்சாம்பாடி சின்னசாமி நயினார் உரை:
கோளில் பொறியின் – கொள்ளும் நினைவுப் பொறியறிவில்லாத
பாவைபோல, எண்குணத்தான் தாளை வணங்காத் தலை – எண்குண இறைவன் பாதங்களைத் தொழாத வெறுந்தலைகள்,
குணம் இலவே – யாதோர் குணமுமில்லை.
“பொறியின்மை
யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை
யின்மை பழி” –திருக்குறள்
– 618
ஆதலால் இங்ஙனம் கூறினார்.
1.1 எண்குணம் யாது?
குறளாசிரியர் யாரை
எண்குணத்தான் என்று விளிக்கிறார்? பரிமேலழகர் தம் விளக்க உரையில் இவ்வாறு கூறுகிறார்:
எண்குணங்களாவன:
1. தன்வயத்தன்
ஆதல்
2. தூய உடம்பினன்
ஆதல்
3. இயற்கை
உணர்வினன் ஆதல்
4. முற்றும்
உணர்தல்
5. இயல்பாகவே
பாசங்களின் நீங்குதல்
6. பேரருள்
உடைமை
7. முடிவு
இல் ஆற்றல் உடைமை
8. வரம்பு
இல் இன்பம் உடைமை
என இவை. இவ்வாறு
சைவாகமத்துக் கூறப்பட்டது. ‘அணிமா” வை முதலாக உடையன எனவும், “கடையிலா அறிவை” முதலாக
உடையன எனவும், உரைப்பாரும் உளர்.
சைவாகமத்துள் கூறப்பட்டது
என்று எண்குணத்தானை சிவனாருக்கு ஏற்றுகிறார் பரிமேலழகர். அவை சிவனாருக்குப் பொருந்துமா?
அவற்றையும் ஈண்டு பார்ப்போம். “உரைப்பாரும் உளர்” என்று அவர் கூறியிருப்பதால் அவற்றை
முதலில் பார்த்துவிட்டு வருவோம்.
1.2 மணக்குடவர் உரை:
எட்டுக் குணத்தினை
உடையவன் என்று கூறியிருக்கிறாரேயன்றி எண்குணங்கள் யாவை என்று அவர் விளக்கவில்லை. விளக்கவில்லையா
அல்லது மறைக்கப்பட்டதா என்பதை பிறிதொரு நாள் விரிவாகப் பார்ப்போம். தற்போது மிக சுருக்கமாக:
கிடைத்த பழைய பத்து உரைகளில் மணக்குடவர் உரையே முதல் உரை. ஆனால் அவ்வுரை பதிப்பிக்கப்பட்டதோ,
பரிமேலழகர் உரைப் பதிப்பிக்கப்பட்டு சுமார் 80 – 100 ஆண்டுகள் கழித்தே இவர் உரைப் பதிப்பிக்கப்படுகிறது.
அதனால் பரிமேலழகர் உரை வரிசையையே எல்லாரும் பின்பற்றும்படியாகிவிட்டது. இக்குறள் மணக்குடவர்
வரிசையில் 10 ஆவது குறளாக வருகிறது என்பதையும் நோக்குக.
1.3 பரிதியார் உரை:
கோளாகிய நவக்கிரகங்களும்,
புலனாகிய கண் வாய் மூக்குச் செவி மெய்யென்னும் ஐம்புலன்களும் உண்டாகிலும் பயனில்லை;
எட்டுக் குணங்களுடைய சிவன் சிவந்த தாளை வணங்காத தலை சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு
நிகராம் என்றவாறு.
எட்டு குணத்தான்”
எட்டுக் குணமாவன:
1. அனந்த
ஞானம்
2. அனந்த
வீரியம்
3. அனந்த
குணம்
4. அனந்த
தெரிசனம்
5. நாமமின்மை
6. கோத்திரமின்மை
7. அவாவின்மை
8. அழியாவியல்பு
என்பன.
1.4 காலிங்கர் உரை:
எண்குணங்கள் என்பதற்கு
எண்ணப்பட்ட குணங்கள் என்று உரை வகுத்திருக்கிறார்.
2.0 பரியும் பரிதியும்
பரிமேலழகர் எண்குணங்கள்
சைவாகமத்துள் கூறப்பட்டது என்று ஒருவிதப் பட்டியலைக்
கொடுக்கிறார். ஆனால், பரிதியார் சிவனாரின் எண்குணங்களாக வேறுவித பட்டியலைக் கொடுக்கிறார்.
இரண்டும் பொருந்தவில்லை. சைவத்துள் கூறப்பட்டதும், சிவனாரின் எண்குணங்களும் ஒன்றாகயிருக்க
வேண்டும் இல்லையா? ஆனால் இரண்டு உரையாசிரியர்களும் எட்டு குணங்களுக்கு வேறு வேறு குணத்தின்
பெயர்களை கூறுகிறார்களே! அது ஏன்? யாருடைய உரை உண்மையானது?? இது நிற்க!
2.1 உரைக் குழப்பங்கள்
பரிதியார் உரைக்கும்
குணங்கள் சமணங் கூறும் எண்குணங்களை ஒட்டி வருகிறதே? எப்படி?? பரிதியார் உரைக்கும் எட்டு
குணங்களுக்கு சான்று எந்த சைவாகமத்தில் கூறப்பட்டியிருக்கிறது? பரி உரைக்கும் குணங்களுக்கு
சான்று எந்த சைவாகமத்தில் கூறப்பட்டியிருக்கிறது? குழப்பமாகவிருக்கிறதே??? இதுவும் நிற்க!!
2.2 அஷ்டமா சித்திகள்
உரைப்பாரும் உளர்
என்றதில் ”அணிமா” முதலான அஷ்டமா குணங்கள் என்று பொருள் கொள்வது இங்கு பொருந்தாது! அணிமா முதலியவற்றை அஷ்டமா
சித்திகள் என்றழைப்பரேயன்றி அஷ்ட குணங்கள் என்று அழைப்பதில்லை.
3.0 சமண நோக்கில் எண்குணங்கள்
இந்திய மொழிகளில்
தோன்றிய அனைத்து இலக்கியங்களிலும் அருகனின் எண்குணங்கள்ப் பற்றிக் கூறப்பட்டியிருக்கின்றன.
அருகனுக்கு திடுதிப்பென்று எட்டு குணங்களை அவைகள் ஏற்றவில்லை. எட்டு குணங்கள்
அருகனுக்கு எவ்வாறு அமைந்தன என்று தக்க காரண, காரியங்களோடும், விளக்கமாகவும் கூறப்பட்டிருக்கிறது.
அவற்றையும் பார்ப்போம்.
3.1 இருநால் வினைகள்
சமணத்தில் கூறப்படும்
இறைத்தத்துவத்திற்கும் மற்ற சமயங்களில் கூறப்பட்டிருக்கும் இறைத் தத்துவத்திற்கும் வேறுபாடுகள்
உண்டு. சமணம் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வது இல்லை. அஃதாவது,
இவ்வுலகத்தைப் படைத்து, காத்து, இரட்சிக்கும் தொழில்களை இறைவனுக்கு ஏற்றுவதில்லை. வினைகளை
வென்று உயர்ந்த ஆன்மாவையே இறைவனாகக் கொள்கிறது சமணம்.
தொல்காப்பியம் “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்” என்று அருகனைத் துதிப்பதையும் இங்கு நோக்குக!
தொல்காப்பியம் “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்” என்று அருகனைத் துதிப்பதையும் இங்கு நோக்குக!
சமணத்தில் கூறப்படும்
வினைகள் எட்டு. முதல் நான்கும் காதி வினைகள் என்றும் மீதம் நான்கும் அகாதி
வினைகள் என்றும் அழைக்கப்படுகிறது.
அவைகள்:
1. ஞானாவரணீயம்
2. தர்சனாவரணீயம்
3. மோஹநீயம்
4. அந்தராயம்
5. வேதனீயம்
6. ஆயுஷ்யம்
7. நாமம்
8. கோத்திரம்
இந்த எட்டு வினைகள்
ஆன்மாவின் இயற்கையான, இயல்பானக் குணங்களை மறைக்கும் வினைகளாகக் கூறப்படுகின்றன.
இந்த எட்டு வினைகளைப்
பற்றிச் சமண நூலான சூடாமணி நிகண்டு இவ்வாறு கூறுகிறது:
“மன்னிய
அறிவுகாட்சி மறைத்தல் வேதனியத்தோடு
துன்னிய
மோகனீயம் தொடர்நாம் கோத்திரங்கள்
முன்னிய
அந்தராயம் மொழிந்த எண்குற்றமாகும்
இன்னவை
தீர்ந்தோன் யாவன்யாவர்க்கும் இறைவனாமே”
3.2 எட்டு
குணங்கள்
1. ஞானாவரணீயம்
என்ற வினைக் கெடுதலால் - கடையிலா ஞானமும்
2. தர்சனாவரணீயம்
கெடுதலால் கடையிலா காட்சியும்
3. மோஹனீயம்
கெடுதலால் கடையிலா இன்பமும்
4. அந்தராயம்
கெடுதலால் கடையிலா வீரியமும்
5. வேதனீயம்
கெடுதலால் அழியா இயல்பும்
6. ஆயுஷ்யம்
கெடுதலால் ஆயுள் இன்மையும்
7. நாமம்
கெடுதலால் நாமமின்மையும்
8. கோத்திரம்
கெடுதலால் கோத்திரமின்மையும்
ஆகிய எட்டு குணங்கள், எட்டு வினைகளை கெடுத்ததினால் கிடைக்கப் பெறுகிறது! அவ்வாறு எட்டு வினைகளை வென்று எட்டு குணங்களை பெற்றவரே அருகராவார். அவரே நாம் தொழத்தக்கவர்.
இவற்றையும் தமிழ்ச் சமண இலக்கியமான சூடாமணி நிகண்டு கூறுவதையும் நோக்குக!
இவற்றையும் தமிழ்ச் சமண இலக்கியமான சூடாமணி நிகண்டு கூறுவதையும் நோக்குக!
“கடையிலா
ஞானத்தோடு காட்சி வீரியமே இன்பம்
மிடையுறு
நாமமின்மை விதித்த கோத்திரங்க ளின்மை
அடைவிலா
ஆயுவின்மை அந்தராயங்க ளின்மை
உடையவன்
யாவன் மற்றிவ்வுலகினுக் கிறைவனாமே”
4.0 கடவுள் வாழ்த்து சொல்லடைகள்
1. ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை
ஏகினான்
4. வேண்டுதல்
வேண்டாமை இலான்
5. தனக்குவமை
இல்லாதான்
6. பொறிவாயில்
ஐந்தவித்தான்
7. இருவினை
சேரா இறைவன்
8. அறவாழி
அந்தணன்
9. எண்குணத்தான்
10. இறைவன்
குறள் கடவுள் வாழ்த்தில்
கூறப்படும் இறைவிளிகள் அருக பெருமானுக்குப் பொருத்தமாகயிருப்பதையும் ஈண்டு பார்ப்போம்.
அருகனே,
1.
இவ்வுலகுக்கு
எண்ணையும், எழுத்தையும் முதன் முதல் அறிவித்ததனால் ஆதிபகவன் என்றும்,
2.
வினையின்
சிறிது காலம் ஆட்பட்டு, தன் முயற்சியால் அவ்வினையின் நீங்கியதால் தூய அறிவு என்னும் கேவல
ஞானத்தை அடைந்ததனால் வாலறிவன் என்றும்,
3.
அவ்வாறு
பகவான் கேவல அறிவு (தூய அறிவு) பெற்றதைத் தன் அவதி ஞானத்தால் அறிந்த தேவேந்திரன் அவருக்கு
”சமவசரண” அமைத்து, அவர் எழுந்தருள பாத அடிகளில் தாமரை மலரை அமைக்கிறான். பகவான் அந்த தாமரை மலரிகளில் நடந்ததனால்
மலர்மிசை ஏகினான் என்றும்,
4.
காமம்
வெகுளி மயக்கம் என்ற முக்குற்றத்தினை அகற்றினதால் வேண்டுதல் வேண்டாமை இலான் என்றும்,
5.
தேவர்களால்
பூஜிக்கப்பட்டவனும், “சமவசரணம்” என்னும் கோட்டத்தில் எழுந்தருளியச் சிறப்புப் பேறுப்பெற்றவனானதால்
தனக்குவமை இல்லாதான் என்றும்,
6.
நம்மைபோல்
தாய் வயிற்றில் பிறந்து, வினைகளுக்குக் காரணமான ஐம்பொறிகளையும் அடக்கினதாலே
பொறிவாயில் ஐந்தவித்தான் என்றும்,
7.
காதி,
அகாதி என்ற இருவினைகளை தன்னிடம் சேரா நின்றதால் இருவினை சேரா இறைவன் என்றும்,
8.
சமவசரணம்
என்னும் திருக்கோயிலில் மண்ணுயிர் முதலான அனைத்து உயிர்களும் உய்ய அறம் உரைத்ததனால் அறவாழி அந்தணன் என்றும்,
9.
எட்டு
வினைகளை வென்று எட்டுக் குணங்களைப் பெற்றதனால் எண்குணத்தான் என்றும்,
10. பிறவி என்னும் பெறுங்கடலை கடக்க புணையாக
மக்களுக்குத் விளங்கியதால் இறைவன் (தீர்த்தங்கரர்) என்றும்,
குறளாசிரியர் தம்
வழிப்படும் இறைவனை சிறப்புப் பெயர்களால் விளிக்கிறார். அவ்வாறே மற்ற சமயக் கடவுளருக்கு சிறப்புப் பெயர்கள், அவர்கள் செயல்களினால் உண்டாகியது என்பதையும் கீழேப் பார்ப்போம்.
4.1 சிவனாரின் சிறப்புப் பெயர்கள்
எடுத்துக் காட்டாக, சைவ இலக்கியங்களில்,
சிவன் தலையில்
கங்கையை ஏந்தியதால் “கங்காதரனென்றும், சந்திரனைத் தரித்ததனால் சந்திரசேகரன் என்றும்,
சூரியன், சந்திரன், அக்னி என்னும் மூன்று கண்களையுடையவனாதலால் முக்கண்ணன் என்றும்,
திரிபுரத்தை நெற்றிக் கண்ணால் எரித்ததனால் திரிபுராந்தகன் என்றும், கபாலத்தைத் தரித்ததனால்
கபாலி என்றும், பூதகணங்களுக்கு நாதனாகையால் பூதநாதன் என்றும், மயானத்தில் ஆடியதனால்
சுடலையாண்டி என்றும், விருஷப வாகனத்தை உடையவன் ஆதலால் விடையோன் என்றும், யமனுக்கு யமனாகயிருந்ததினால்
காலகாலன் என்றும், பாரியாளும், மகனுடன் சேர்ந்திருந்ததால் சோமஸ்கந்தன் என்றும் கூறுவதைபோல, குறள் கடவுள் வாழ்த்தில் வரும் சிறப்பு விளிகளை சிவனுக்கு
எங்கும் வழங்கிவராமையினாலே, பின்னாளில் திருக்குறளை சைவபரமாகக் காட்ட சிவனுக்கு “எண்குணத்தான்” என்று வலிந்துக் கூறப்பட்டது
என்பது வெள்ளிடை மலை. ஸ்ரீலஸ்ரீ.ஆறுமுக நாவலர் சூடாமணி நிகண்டில் இடைச் செருகல் செய்து பதிப்பிக்க முயன்றது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு!
4.2 சிவனார் எண்குணத்தானா?
சிவனாருக்கு எண்குணத்தான்
என்ற சிறப்பு பிரயோகம் தேவாரக் காலத்திற்கு முன் யாண்டும் பயின்று வரவில்லை. தேவாரத்தில்
தான் முதன் முதல் பயின்று வருகிறது. தேவாரத்தின் படியே எடுத்துக் கொண்டாலும், முழுமுதற்
கடவுளான சிவனாருக்கு எட்டு குணங்கள்தான் உண்டு என்று யாரால் கணிதம் சொல்லமுடியும். முழுமுதற்
கடவுளின் குணங்களை பாமர அறிவுக் கொண்டோர்களால் அளக்க முடியுமா? யோசித்துப்
பாருங்கள்! அப்படியே, சிவனாரே அடியார்களுக்கு தனக்கு எட்டு குணங்கள் உண்டு என்று
கூறியிருந்தாலும் மேற்சொன்னபடி (4.1 சிவனாரின் சிறப்பு பெயர்கள்) எட்டு குணங்கள் வந்ததிற்கான
சிறப்புக் காரணம் யாதோ? யாராவது விளக்கினால் நன்றமையும்.
4.3 சிவனார் குணம் எண்ணிலிக் கொண்டவர்
சைவ சித்தாந்தத்தின்படி, சிவனே இவ்வுலகத்தை
உருவாக்கியவர். அவரே முழுமுதற் கடவுள். அதனால் அவருக்கு சொற்ப எண்ணிக்கையில் குணங்களை ஏற்றுவதுப்
பொருந்தாது. அவரின் குணங்களை அளக்க நமக்கு திறன் ஏது? எண்னற்றக் குணம் கொண்டவர் அவர். அதனால் குண எண்ணிலி (Infinite
Guna). ஆதலினால், எண்குணத்தான் என்ற பிரயோகம் அவருக்கு சற்றும் பொருந்தாது என்பதையும் நினைவில்
வையுங்கள்.
5.0 அருகனே எண்குணத்தான்
தமிழில் எழுந்த
இலக்கிய, நிகண்டுகள் மட்டுமன்று இந்திய மொழிகளில் எழுந்த எல்லா இலக்கியங்களிலும் அருகனுக்கு
எண்குணங்கள் வழங்கி வருவதைக் காணலாம். அவர் நம்மை போன்று ஒரு தாயின் வயிற்றில்
பிறந்து வளர்ந்து, ஒவ்வொரு வினைகளாக வென்று உயர்ந்து ஒவ்வொரு குணங்களையும் பெற்று விளங்கி இறைத்தன்மையை எய்தியதால் அவருக்கு
எண்குணத்தான் என்ற பிரயோகம் சாலப் பொருந்தும்.
5.1 இலக்கியச் சான்றுகள்
பண்ணவன் எண்குணன் – சிலப்பதிகாரம் – (10:188)
எண் குணனும் கோட்பட்டு – சீவக சிந்தாமணி – 1469
“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
- திருநூற்றந்தாதி (11)
பூமாமகளும் கலைமாமகளும் புகழ்ந்த திரு
நாமம் ஆயிரத்து இருநான்மையும் பாடி நடிக்கும்படி
கோமான் திருமலைக் குணம் எண் இறைவன் வரதம்
தேமா மலரிற் மணித்தே வணங்குவன்
– சிகாமணிநாதர் அந்தாதி – 12
எட்டுவல் வினை வென்ற பின்னையோர்
எட்டுநற் குண வேவினை.. – நேமிநாதர் பதிகம் – 3
எண் குணனும் கோட்பட்டு – சீவக சிந்தாமணி – 1469
“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
- திருநூற்றந்தாதி (11)
பூமாமகளும் கலைமாமகளும் புகழ்ந்த திரு
நாமம் ஆயிரத்து இருநான்மையும் பாடி நடிக்கும்படி
கோமான் திருமலைக் குணம் எண் இறைவன் வரதம்
தேமா மலரிற் மணித்தே வணங்குவன்
– சிகாமணிநாதர் அந்தாதி – 12
எட்டுவல் வினை வென்ற பின்னையோர்
எட்டுநற் குண வேவினை.. – நேமிநாதர் பதிகம் – 3
கல்வெட்டுப் பாடல்:
ஆரணி தாலுகா அருகேயிருக்கும் குன்றம் திருமலை. இதற்கு
பல்குன்றக் கோட்டம், வைகைமலை, வைகாவூர்த் திருமலை
போன்ற பெயர்களுள் எண்குண இறைவன் குன்றம் என்பதுவும்
நோக்கத்தக்கது.
“வஞ்சியர் குலபதி எழினி வகுத்த
வியக்க நியக்கியரோ
டெஞ்சிய வழிவ்ய் திருத்தி யிவ்வேண்குண
விறை திருமலை வைத்தான்
… தகடையர் காவலன்
விடுகாதழிய பெருமானோய்”
ஆரணி தாலுகா அருகேயிருக்கும் குன்றம் திருமலை. இதற்கு
பல்குன்றக் கோட்டம், வைகைமலை, வைகாவூர்த் திருமலை
போன்ற பெயர்களுள் எண்குண இறைவன் குன்றம் என்பதுவும்
நோக்கத்தக்கது.
“வஞ்சியர் குலபதி எழினி வகுத்த
வியக்க நியக்கியரோ
டெஞ்சிய வழிவ்ய் திருத்தி யிவ்வேண்குண
விறை திருமலை வைத்தான்
… தகடையர் காவலன்
விடுகாதழிய பெருமானோய்”
(SII, Vol.1 No.75 ARE/90/1887)
”அனந்தஞானம்
அனந்ததரிசனம் அனந்தவீரியம்
அனந்தசுகியே
நாமமின்மை கோத்திரமின்மை
ஆயுவின்மை
அழியா இயல்பென
ஏயுங்காலை
இறைவன் எண்குணம் – திவாகர
நிகண்டு
இலக்கணம்
எட்டமை இறைவற்றொழுதெழுத்
திலக்கண
காண்டம் இயம்புவல் யானே”
– பேரகத்தியத் திரட்டு
இரு நால்வினை
கெடுத்திட்டெண் குணனு மெய்தி”
– ஜீவசம் போதனை
”இறைவனீ ஈசனீ எண் குணத் தலைவனீ” – மேருமந்தர புராணம்
“குணம் எண் குரிசில்”….”பெறுவதோர் குணங்கள்
எட்டையும்” – ஆதிநாதர்
பிள்ளைத் தமிழ்
(இன்னும் நிறையச்
சான்றுகள் தரமுடியும் விரிவஞ்சிக் கொடுக்கப் படவில்லை)
அறம் மறவற்க! அறமல்லது
துணையில்லை!!
வாழிய
நல்லறம்!
இரா.பானுகுமார்,
சென்னை